பாசிம் பர்தமான் (மேற்கு வங்கம்): கடந்த ஒன்றரை ஆண்டுகளில், கரோனா பெருந்தொற்று மக்களின் அன்றாட வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், மாணவர்களின் கற்றலும் பெரும் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.
காணொலி, தொலைக்காட்சி வாயிலான வகுப்புகள் ஆகியவை தான் பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களின் கற்பிக்கும் வழிமுறையாக தற்போது இருந்துவருகிறது.
டீச்சர் ஆஃப் தி ஸ்ட்ரீட்
பள்ளிக்கல்வியைக் எடுத்துக்கொண்டால், ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு தான் கற்றலில் பாதிப்பு அதிகம் எனக்கூறலாம்.
தொழில்நுட்பக் கருவிகளில் அதிக நேரம் செலவிடுவது என்பது இல்லாமல், பள்ளி வளாகத்தில் நேரம் செலவிடாது, சக மாணவர்களை சந்திக்காது இருப்பது, எதிர்காலத்தில் அவர்களுக்குப் பல சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மாணவர்களின் இடைநிற்றலும் அதிகரித்து வருகிறது.
ஆனால், கரோனா தொற்று காலத்தில் ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
இதனால்தான், மேற்கு வங்கத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், ஒரு கிராமத்தையே வகுப்பறையாக மாற்றி, குழந்தைகளுக்குப் பாடம் நடத்திவருவது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அடிப்படை முதல் அனைத்தும்...
மேற்கு வங்க மாநிலத்தின் பாசிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ளது, ஜோபா அட்பாரா எனும் பழங்குடியின கிராமம்.
தீப் நாராயண் நாயக் எனும் அரசுப்பள்ளி ஆசிரியர், அக்கிராமத்தில் உள்ள வீடுகளின் சுவரில் கரும்பலகை வண்ணத்தை அடித்து சமூக இடைவெளியுடன் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார்.
தீப் நாராயண் குழந்தைகளுக்கான பாடல் முதல் முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது போன்றது வரை அனைத்தையும் கற்றுக்கொடுக்கிறார்.
அவரிடம் 60 மாணவர்கள் பயின்றுவரும் நிலையில், அவரின் இந்த முன்னெடுப்பிற்கு, அக்கிராம மக்களும் உறுதுணையாக உள்ளனர். இணைய வசதிகளுடனான இரண்டு மடிக்கணினிகள், மைக்ரோ ஸ்கோப் ஆகியவற்றைக் கொண்டும் மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படுகிறது.
இந்தச் செயல்பாடு குறித்து தீப் நாராயண், "என்னிடம் கல்வி கற்பவர்கள் பெரும்பாலும், முதல் தலைமுறை மாணவர்கள்.
அவர்களின் பெற்றோர் தினக்கூலிகளாக வேலைப் பார்த்து வருவதால், குழந்தைகளைப் பெரும்பாலும் பள்ளிகளுக்கு அனுப்பமாட்டார்கள். கரோனா தொற்றுக் காலத்தில் மாணவர்கள் பள்ளியில் தொடர்வதும் மிகச்சிரமமாக உள்ளது.
இதையெல்லாம், பார்த்த பிறகுதான் இந்த கற்பிக்கும் முறையை செயல்படுத்தினேன்" என்றார்.
திறக்கப்பட வேண்டுமா பள்ளிகள்?
நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்களின் கல்வி மேற்கொண்டு பாதிக்கப்படாமல் இருக்க, தொற்று தடுப்பு நடவடிக்கையுடன் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் எனப் பல தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏறத்தாழ 14,000 மாணவர்களிடம் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், வெறும் 8 விழுக்காடு கிராமப்புற மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளில் முறையாகப் பயின்று வருகின்றனர்.
37 விழுக்காடு மாணவர்கள் படிப்பதே இல்லை என்றும், பாதிக்கும் மேற்பட்டோர் சில வார்த்தைகளுக்கு மேல் படிப்பதில் கவனம் செலுத்த மறுக்கின்றனர் என்றும் அதில் தெரியவந்துள்ளது.
பெற்றோர், கல்வியாளர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று கூறுவதற்கு இதுவும் காரணம். இதுபோன்ற ஒரு சூழலில், தீப் நாராயண் நாயக்கின் 'வீதியில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் செயல்பாடு' என்பது கற்பித்தலில் உள்ள சாத்தியங்களை உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது எனக் கூறலாம்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு - 73 மாணவர்களுக்கு கரோனா தொற்று