கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கட்வா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, கடந்த சில நாள்களுக்கு முன்பு செளவிக் ஆலம் என்பவர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் மருத்துவமனைக்கு பொருட்கள் வழங்கி வரும் ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவையில் உள்ள தொகை தொடர்பான ரசீதுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றை உடனடியாக சரிபார்த்து பணத்தை செலுத்தும்படி கூறப்பட்டுள்ளது. இதையடுத்து செளவிக் ஆலம் அந்த ரசீதுகளை சரிபார்த்துள்ளார். அப்போது, பிரியாணி வழங்கியதற்காக மட்டும் 3 லட்சம் ரூபாய்க்கு ரசீது கொடுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மருத்துவமனைக்கு மரச்சாமான்கள், வாகனங்கள், உணவு உள்ளிட்ட பல்வேறு பொருள்களை சப்ளை செய்யும் கிங்ஷுக் கோஷ் என்ற ஒப்பந்ததாரர் இந்த ரசீதுகளை சமர்ப்பித்ததாக தெரிகிறது. அவர் பிரியாணிக்கு மட்டுமல்லாமல் பிற சேவைகளுக்காகவும் சுமார் 1 கோடி ரூபாய்க்கான ரசீதை வழங்கியுள்ளார்.
அவர் போலியான கணக்கு காட்டி பணமோசடி செய்யும் நோக்கில் ரசீதுகளை வழங்கியிருப்பதாக சந்தேகம் எழுந்ததால், கண்காணிப்பாளர் ஆலம் மருத்துவமனை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டார். இதில் போலியான ரசீதுகள் சமர்ப்பிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி சுபர்ணா கோஸ்வாமியிடம் கேட்டபோது, "போலியான ரசீதுகள் சமர்ப்பிக்கப்பட்டது உண்மைதான்.
அந்த ஒப்பந்ததாரர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவமனை ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதால், நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிந்ததும் முழு விபரங்கள் குறித்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என்று கூறினார்.