மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில், அக்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளுக்கான நபர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இதில் மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்தலில் அக்கட்சியின் எம்பி, எம்எல்ஏக்கள் தொடங்கி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி பிரமுகர்கள் என அனைவரும் வாக்களித்துள்ளனர்.
அத்துடன் கட்சியை தேசிய அளவில் விரிவாக்கம் செய்யும் விதமாக தேசிய காரிய கமிட்டி ஒன்றை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் கோவா முன்னாள் முதலமைச்சர் லுசின்ஹோ பெலிரோ, அசாமை சேர்ந்த சுஷ்மிதா தேப், மேகாலயாவைச் சேர்ந்த முகுல் சங்மா ஆகியோர் இடம்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி உறுப்பினராக 26 ஆண்டுகள் இருந்துவந்த மம்தா பானர்ஜி, கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட முரண் காரணமாக 1998ஆம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தார். 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியை வெற்றிபெற செய்த மம்தா, 34 ஆண்டுகள் கோலோச்சிய கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: நரேந்திர மோடியிடம் கடவுளின் அம்சங்களைக் காண்கிறேன் - சிவராஜ் சிங் சவுகான்