கொல்கத்தா(மேற்கு வங்கம்): யாஸ் புயலில் பாதிப்படைந்த ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை பிரதமர் மோடி நேற்று முன்தினம் (மே 28) பார்வையிட்டார்.
அதன்படி, மேற்கு வங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் மோடி பார்வையிட்டார். அதன் பின்னர், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அரசு முக்கிய அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் ஒன்று திட்டமிட்டப்பட்டது.
மம்தா vs மோடி
அக்கூட்டத்திற்கு எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால், மம்தா பானர்ஜி அதிருப்தி அடைந்து கூட்டத்திற்கு அரைமணி நேரம் தாமதமாக வந்தார். அத்துடன், அரசு அலுவலர்களும் அக்கூட்டத்திற்கு தாமதமாக வந்தனர்.
இதனால் ஆளுநர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி ஆகியோர் அவர்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்தாகத் தகவல் வெளியானது.
மேலும் மம்தா பிரதமரைத் தனியாக 15 நிமிடங்கள் சந்தித்துவிட்டு, ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்ததால், இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் ஜெகதீப் தங்கர் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
தூக்கியடிக்கப்பட்ட தலைமைச் செயலாளர்
இதையடுத்து, உடனடியாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபத்யாயை திரும்ப பெறுவதாக ஒன்றிய அரசு மேற்கு வங்க அரசுக்கு கடிதம் அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை டெல்லியில் உள்ள பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு ஜூன் 31ஆம் தேதிக்குள் பணியில் இணையும்படி அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், யாஸ் புயல் பாதிப்பிற்கான நிவாரணம் குறித்து அனைத்து அரசு செயலாளர்களுடன் மம்தா பானர்ஜி இன்று (மே31) ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். இதில், தலைமைச் செயலாளர் என்ற முறையில் அலபன் பந்தோபத்யாய் பங்கேற்பார் என்பதால் அவர் இன்று டெல்லியில் உள்ள ஒன்றிய அரசின் புதிய பணியில் இணைய வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வெறும் பேச்சு மக்களுக்கு எந்தவகையிலும் உதவாது - ராகுல் காந்தி விமர்சனம்