கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முடிவுகள் மே 2ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. அங்கு ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட போவதில்லை என பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ் அறிவித்துள்ளார். தொடர்ந்து மம்தா பானர்ஜியின் நான்கு சக்கர (வீல் சேர்) பேரணியை விமர்சித்த அவர், மக்களிடம் அனுதாப வாக்குகள் பெற நடத்தும் நாடகம் என்றும் கூறினார்.
மேற்கு வங்கத்தில் வேட்பாளர் தேர்வில் பாஜக தொடர்ந்து சுணக்கத்தை காட்டிவருகிறது. 294 தொகுதிகளில் இதுவரை 123 வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜகவில் அனைத்திந்திய ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் கட்சிக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுவருகிறது.
பொருளாதார அறிஞர் அசோக் லகிரி அலிபுர்தூர் மாவட்டத்தில் உள்ள பலூர்காட் தொகுதியில் போட்டியிடுகிறார். இதுமட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களான பாபுலால் சுப்ரியோ, லாக்கட் சட்டர்ஜி, ஸ்பன் தாஸ்குப்தா மற்றும் நிதிஷ் பிரமனிக் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். எனினும் திலிப் குாஷ் போட்டியிடாததற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர்.