டெல்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆண்டுதோறும் யுபிஎஸ்சி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி கடந்தாண்டு (2020) நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகளை தேர்வாணையம் நேற்று (செப்.24) வெளியிட்டுள்ளது. இதில், அதிக மதிப்பெண் பெற்று தரவரிசைப் பட்டியலில் பிகாரைச் சேர்ந்த சுபாம் குமார் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
சுபாம் குமார் மும்பையில் உள்ள ஐஐடியில் சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். இரண்டு முறை யுபிஎஸ்சி தேர்வு எழுதிய அவர், மூன்றாவது முறையாக கடந்தாண்டு எழுதி, தேர்ச்சிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
தனது வெற்றி குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய அவர், " நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னால் முடிந்த முயற்சி எடுத்து தேர்வை எதிர்கொண்டேன். முதன்மைத் தேர்வில் சில கேள்விகளுக்கு என்னால் சரியாக பதிலளிக்க முடியாததால், தேர்வில் தேர்ச்சி பெறுவதில் சிரமம் என கருதினேன். ஆனால், தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றதை என்னால் நம்பமுடியவில்லை" என்றார்.
கடந்தாண்டு நடந்த தேர்வில், 545 ஆண்கள், 216 பெண்கள் என மொத்தம் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல்நிலைத் தேர்வு நடந்தது. 4,82,770 பேர் இத்தேர்வில் பங்கேற்றனர்.
இதில், 10,556 பேர் மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றனர். முதன்மைத் தேர்வு இந்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. இறுதியாக நேர்காணலுக்கு 2,053 பேர் மட்டுமே தேர்வாகியிருந்தனர்.
இதையும் படிங்க: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு - 761 பேர் தேர்ச்சி