கொல்லம் (கேரளா): கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா (22), வரதட்சணைக் கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவர் கிரண் குமார் குற்றவாளி என கேரளா நீதிமன்றம் நேற்று (மே 23) தீர்ப்பளித்தது. இதையடுத்து, இன்று (மே 24) குற்றவாளி கிரண் குமாருக்கான தண்டனை விவரங்களை அறிவித்தது.
அதன்படி கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.12.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 2 லட்சத்தை விஸ்மயாவின் பெற்றோருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயாவுக்கும், மாநில அரசின் மோட்டார் வாகனத்துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கிரண்குமாருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது கிரண் குமாருக்கு 100 சவரன் நகைகள், ஒரு ஏக்கர் நிலம், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் பெண் வீட்டார் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனாலும், கூடுதல் வரதட்சணை கேட்டு கிரண் குமார் வீட்டார் துன்புறுத்தி வந்துள்ளனர். விஸ்மயாவை கிரண்குமார் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த விஸ்மயா கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விஸ்மயா தற்கொலை செய்து கொள்வதற்கு முன், வரதட்சணை கேட்டு கிரண் குமார் தன்னை அடித்துத் துன்புறுத்தியது தொடர்பான செய்தி, புகைப்படங்களை விஸ்மயா உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் கிரண் குமாரை கைது செய்தனர். கிரண் குமாரை பணிநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று விஸ்மயா கணவர் கிரண் குமார் தான் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்நிலையில் இன்று தண்டனை விவரங்களை நீதிமன்றம் அறிவித்தது.
அப்போது, கிரண் குமார் தரப்பில், தனது தந்தை, தாய் வயதானவர்கள், உடல் நிலை சரியில்லாமல் உள்ளனர் எனவும்; அவர்களைக் கவனித்துக் கொள்ள தன்னை தவிர வேறு யாரும் இல்லை எனக் கூறி குறைவான தண்டனை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அரசு தரப்பில், கிரண் குமாருக்குக் கொடுக்கும் தண்டனை முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும்; அதனால் தண்டனையை குறைக்கக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றம் கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.12.50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரள விஸ்மயா வழக்கு: கணவர் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு