டெல்லி: மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாவட்டங்களை ஆய்வு செய்து அதில் இருந்து 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றை முன்னேற்றும் வகையில் 2018ல் முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தைப் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
இதில் விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது. சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை, நீர்வள ஆதாரம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தொழில் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சிப் பாதைக்கு அம்மாவட்டம் நிர்வாகம் கொண்டு சென்றது.
இதனையடுத்து, குறு, சிறு, நடுத்தர நிறுவன தேசிய விருது 2022க்கு விருதுநகர் மாவட்டம் முதல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் நேற்று (ஜூன்.30) விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டிக்கு விருது வழங்கினார்.