விஜயவாடா: ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் சொந்த மகளை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் கார்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (ஜனவரி 13) நடந்துள்ளது. அவரது மனைவி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து விஜயவாடா போலீசார் தரப்பில், கார்த்தி தனது மனைவி கிருத்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் 2 மகள்களுடன் வசித்துவந்தார்.
இவருக்கும் கிருத்திகாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால் கிருத்திகா தனது மகள் இருவரையும் விடுதியில் சேர்ந்துள்ளார். இதற்கு கார்த்தி தொடர்ந்து அதிருப்தி தெரிவித்துவந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, விடுதியில் இருந்து மகள்கள் விடுமுறைக்காக வீடு திரும்பியுள்ளனர். அப்போது, கார்த்திக்குக்கும் அவரது 13 வயது மூத்த மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கார்த்தி பெல்ட்டால் மூத்த மகளை தாக்கியுள்ளார்.
இந்த வாக்குவாதத்திற்கான காரணம் குறித்து கிருத்திகா கேட்டபோது கார்த்தி ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கிருத்திகா அவரை கண்காணிக்க தொடங்கினார். அந்த வகையில், அவரது செல்போனை எடுத்து பார்த்தபோது திடுக்கிடும் உண்மை தெரியவந்தது. அதில், அவரது மூத்த மகளின் ஆபாசப் படங்கள் இருந்துள்ளன. இதையடுத்து கிருத்திகா மகளிடம் விசாரித்துள்ளார்.
அப்போது அவரது மகள், தன்னை 3 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துவந்ததையும், வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டிவந்ததையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கிருத்திகா விஜயவாடா போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கார்த்தி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டால் சிறுமிகளோ, மாணவிகளோ தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். மகளிர் போலீசாரை தயக்கமின்றி அனுக வேண்டும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தோழியுடன் கடலை போட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர் கைது