ஹைதராபாத்: தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி, படிக்காதவன், பையா, சிறுத்தை, அயன், சுறா, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானவர் தமன்னா. முன்னணி நடிகையாக இருக்கும் இவர், இவருக்கு பின் வந்த நடிகைகளான சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் இடத்தை பிடிக்க முடியவில்லை என்றாலும், தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார்.
மேலும், கிசுகிசுக்களில் சிக்காத நடிகை பட்டியலில் இவரும் ஒருவர். அந்த வகையில், நடிப்பால் மட்டுமே பேசப்பட்டு வந்த நடிகை தமன்னா தற்போது திருமண பேச்சிற்குள்ளும் அடியெடுத்து வைத்துள்ளார். இதற்கு காரணம், நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவின் காதல் பற்றி வெளியான தகவலே.
பாலிவுட்டில் கவனம் பெற்ற நடிகராக இருந்து வரும் விஜய் வர்மாவும், நடிகை தமன்னாவும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ என்ற படத்தில் நடித்தபோது காதலில் சிக்கியதாக கூறப்படுகிறது. அதையடுத்து, இருவருமே தங்களின் காதலை வெளிப்படையாக உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து, தற்போது இருவரும் ஜோடியாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, ஒன்றாக நேரத்தை செலவிடுவது என தங்கள் உறவை வலுப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இவர்கள், திருமணம் குறித்த எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில், இருவருக்கும் எப்போது திருமணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்வி மழை எழுந்த வண்ணம் உள்ளது. மேலும், இந்த கேள்வி தற்போது விஜய் வர்மா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், தமன்னா உடனான திருமணம் பற்றி தனது தாய் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பதாகவும், அதற்கு அவருக்கே இன்னும் பதில் அளிக்காததாகவும், திருமணம் பற்றி தற்போது எதுவும் கூற முடியாது என்றும் தட்டிக்கழித்து விட்டார். இதையடுத்து, இந்த பதிலைக் கேட்ட ரசிகர்கள் அப்படியானால் திருமணம் நடக்காதா என ஒருபுறம் கோபத்திலும், மறுபுறம் குழப்பத்திலும் உள்ளனர்.
ஆனால், முன்னதாக நடிகை தமன்னாவின் திருமணம் குறித்த பதில் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது. அதில் அவர், திருமணம் மீது நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வோம். ஆனால் தற்போது அதற்கான மனநிலை இல்லை என தெரிவித்து உள்ளார். இதனால், விஜய் வர்மாவின் இந்த பதில் உடனடியாக திருமணம் செய்து கொள்வதில் நாட்டம் இல்லாததைக் காண்பிப்பதாகத் தெரிகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கல்யாணத்திற்கு அப்புறம் 3 ஹீரோயினுடன் படம்.. கீர்த்தி எதுவும் சொல்ல மாட்டாங்க - அசோக் செல்வன் கலகலப்பு!