பனாஜி : பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் மனோகர் பாரிக்கர். இவர் கோவா மாநிலத்தில் மூன்று முறை முதலமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.
இவரது மகன் உத்பல் பாரிக்கர் (Utpal Parrikar). இவர் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து பாஜகவில் இருந்து விலகி, பனாஜி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட உத்பல் பாரிக்கர் முடிவெடுத்துள்ளார்.
இந்த முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உத்பல் பாரிக்கர், “வேறு வழியில்லாமல் தவித்தேன். நான் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு பனாஜியில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்.
என் பதவி விலகல் முடிவை கட்சிக்கு தெரியப்படுத்தியுள்ளேன். இது எனக்கு கடினமான தேர்வு, கோவா மக்களுக்காக இதைச் செய்கிறேன். எனது அரசியல் எதிர்காலம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம், கோவா மக்கள் பார்த்துக் கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
உத்பல் பாரிக்கர், பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வரலாற்றின் ஒழுங்கின்மையை சரிசெய்யும் நேதாஜி!