மும்பை: இங்கிலாந்தின் தலைநகர் லண்டனிலிருந்து நேற்று(மார்ச்.11) ஏர் இந்தியா விமானம் ஒன்று மும்பை வந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடிமகனான ராம்காந்த்(37), விதிகளை மீறி விமானத்தில் புகைப்பிடித்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமான ஊழியர்கள் அவரிடம் கேட்டபோது, அவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
விமான ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தி இருக்கையில் அமர வைத்தனர். பின்னர், சிறிது நேரம் கழித்து அவர் விமானத்தின் கதவை திறக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது விமானப் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நபர் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டே இருந்ததால் சக பயணிகள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து ஏர் இந்தியா ஊழியர் ஒருவர் கூறும்போது, "விதிகளின்படி விமானத்தில் புகை பிடிக்கக் கூடாது. ஆனால், அந்த பயணி கழிவறைக்குச் சென்றதும் எச்சரிக்கை அலாரம் அடிக்கத் தொடங்கியது. நாங்கள் கழிவறைக்குச் சென்று பார்த்தபோது, அவரிடம் சிகரெட் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக அவரது கையிலிருந்த சிகரெட்டை பிடுங்கி வீசினோம். அப்போது அந்த நபர் கூச்சலிடத் தொடங்கினார். பிறகு எங்களது ஊழியர்கள் அனைவரையும் உதவிக்கு அழைத்து, அவரை சமாதானப்படுத்தி இருக்கையில் அமர வைத்தோம்.
சிறிது நேரம் கழித்து அவர் விமானத்தின் கதவை திறக்க முயன்றார். அவரது நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் பயந்து விட்டனர். ஆனால், அவர் எதையும் பொருட்படுத்தாமல் விமானத்தில் தகராறு செய்து கொண்டிருந்தார். நாங்கள் கூறுவதைக் கேட்காமல், கத்திக் கொண்டே இருந்தார். பின்னர், நாங்கள் அவரது கைகளையும் கால்களையும் கட்டி இருக்கையில் உட்கார வைத்தோம்" என்றார்.
விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், விமான ஊழியர்கள் ராம்காந்தை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விமானத்தில் புகைப் பிடித்தது, சக பயணிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது, விமான ஊழியர்கள் வழங்கிய சட்டப்பூர்வ விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ராம்காந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடமிருந்து ஒரு இ-சிகரெட்டையும் போலீசார் மீட்டுள்ளனர்.
ராம்காந்த் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்க பாஸ்போர்ட்டை வைத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவர் குடிபோதையில் இருந்தாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பதை தெரிந்து கொள்வதற்காக, அவரிடமிருந்து மாதிரிகளை சேகரித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவிலிருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில், கழிவறையில் புகைப்பிடித்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். முன்னதாக கடந்த ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில், சங்கர் மிஸ்ரா என்ற பயணி மது போதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர் சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: "என் தந்தை என்னை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்" - ஸ்வாதி மாலிவால் பகீர்