கொச்சி (கேரளா): கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியிலுள்ள ஜம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நேற்று (அக். 29) காலை நடைபெற்ற மதவழிபாட்டு பொது நிகழ்ச்சியில் அடுத்தடுத்து வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று (அக்.. 29) உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 12 வயதுடைய சிறுமி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
களமச்சேரி குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த சிறுமி, நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடலில் 95 சதவீத தீக்காயங்களோடு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (அக். 30) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. உயிரிழந்த சிறுமி, எர்ணாகுளம் மாவட்டம் மலயாட்டூரை சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது.
வென்டிலேட்டர் வைத்து சிகிச்சை அளித்த போதிலும், சிறுமியில் உடல் மோசமடைந்ததாகவும், நள்ளிரவு 12.40 மணி அளவில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ள நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து கேரள முதலமைச்சர் அலுவலம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அனைத்துக் கட்சி கூட்டமானது கேரள தலைமை செயலக வளாகத்தில் உள்ள முதலமைச்சர் மாநாட்டு அரங்கில் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், குண்டு வெடிப்பு தாக்குதலில் காயமடைந்த 52 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், 30 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
இந்த குண்டுவீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பாக டொமினிக் மார்ட்டின் என்பவர் திருச்சூர் கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவரை ரகசிய இடத்தில் வைத்து கேரள போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கேரளாவில் மதவழிபாட்டு நிகழ்ச்சியில் வெடி விபத்து - இரண்டு பேர் பலி! என்ஐஏ சோதனை என தகவல்!