ஃபரூக்காபாத் (உத்தரப் பிரதேசம்): உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் முகமது ஜமாலுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் மூலம் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஈராம் என்பவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதுகுறித்து இருவீட்டாரிடம் தெரிவித்த நிலையில், திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, ஜமால் ஜூன் 7ஆம் தேதி பாகிஸ்தான் சென்றார். ஜூன் 17ஆம் தேதி முகமது ஜமாலுக்கும், ஈராமுக்கும் பாகிஸ்தான், கராச்சியில் உள்ள கரிபாபாத் நகரத்தில் திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து முகமது ஜமாலின் தந்தை அலிமுதீன் கூறுகையில், "நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். திருமண புகைப்படத்தை மகன் போனில் அனுப்பி வைத்தார். இருவரும் இந்தியா திரும்புவதற்காக காத்திருக்கிறோம். அவர்கள் இந்தியா வந்தவுடன் பாரம்பரிய முறைப்படி சடங்குகள் செய்து நிகழ்ச்சி நடத்தப்படும். சட்ட நடவடிக்கைகள் முடிந்த பிறகு வீடு திரும்புவார்கள்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறுகையில், "பாகிஸ்தான் பெண்ணுக்கு ஓர் ஆண்டு தற்காலிக விசா வழங்கப்படும், இது மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும். இடைப்பட்ட காலத்தில், அவர் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்"என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் சகோதரர்களை தேடி கண்டுபிடித்து சந்தித்த பாகிஸ்தான் சகோதரி!