டெல்லி: டெல்லியில் உள்ள புகழ்பெற்ற வரலாற்று நினைவுச்சின்னமான குதுப்மினார் இஸ்லாமிய மன்னரால் கட்டப்பட்டது. இந்த குதுப்மினார் பல இந்து கோயில்களை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்றும், கோயில்களில் இருந்த சிலைகள் இப்போதும் குதுப்மினாரில் இருப்பதாகவும் இந்து அமைப்புகள் கூறி வருகின்றன.
குதுப்மினாரின் பெயரை "விஷ்ணு ஸ்தம்பம்" என்று மாற்ற வேண்டும் என்றும் இந்துக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே சில நாட்களுக்கு முன்பு மத்திய கலாசாரத் துறை செயலர் கோவிந்த் மோகன், குதுப்மினாருக்கு சென்றார். அவருடன் வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் துறை அலுவலர்கள் சென்றனர். குதுப்மினார் வளாகத்தை சுற்றிப் பார்த்த கோவிந்த் மோகன், உண்மைகளைக் கண்டறிய, அங்கு கள ஆய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டதாகவும் தெரிகிறது.
மறுத்த அமைச்சர்: இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி, குதுப்மினாரில் அகழ்வாராய்ச்சி நடத்துவது தொடர்பாக அமைச்சகம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், இதுகுறித்து எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.