கடந்த நான்கு மாதங்களாக, கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. இந்நிலையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவை, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்தந்த மாநிலங்களுக்குள்ளான போக்குவரத்திற்கும் மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்கும் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பபெறப்படுகிறது. அதேபோல், வணிக ரீதியான அண்டை நாடுகளுடனான போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணத்திற்கான இ-பாஸ் முறை திரும்பபெறப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில இடங்களை தவிர்த்து கட்டுப்படுத்தப்பட்டு பகுதிகளுக்கு வெளியே அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கேலிக்கை, விளையாட்டு, கல்வி, கலாசார, மத நிகழ்ச்சிகளில் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருந்தது. தற்போது, திருத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளுடன் திரையரங்குகளை கூடுதல் பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு மட்டும் நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது, அனைவருக்கும் திறக்கப்படுகிறது.