கெய்ரோ: ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி ஆப்பிரிக்க அகதிகள் சென்ற படகு லிபியா கடற்பகுதியில் கவிழ்ந்து நேற்று (ஜூலை 26) விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 57 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இது தொடர்பாக புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சஃபா மெஸ்லி கூறுகையில், "இந்தப் படகு மேற்கு கடலோர நகரமான கும்ஸிலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. இதில் 75 அகதிகள் பயணம் செய்துள்ளனர். 20 பெண்கள், இரண்டு குழந்தைகள் உள்பட 57 பேர் கடலில் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தில் 18 அகதிகள் மீட்டகப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனர்". இயந்திர கோளாறு காரணமாக கப்பல் பாதியில் நிறுத்தப்பட்டதாகவும், பின்னர் மோசமான வானிலை ஏற்பட்டு படகு நிலைதடுமாறி கடலில் கவிழ்ந்தது என மீட்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
ஒரு வார கால இடைவெளிக்குள் லிபியா கடற்பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது விபத்து இதுவாகும். அண்மைகாலமாக லிபியாவிலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் மட்டும் 7,000க்கும் அதிகமானோர் இவ்வாறு வெளியேறிச் செல்ல முயன்று நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு லிபியாவில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: எல்லையில் பதற்றம்: காவல் மற்றும் துணைராணுவப்படையினர் 6 பேர் உயிரிழப்பு