கொச்சி: கேரளாவில் பகவந்த் சிங் என்ற மந்திரவாதி, செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, எர்ணாகுளம் மாவட்டம் கடவந்திரா பகுதியைச் சேர்ந்த பத்மம் (52), காலடியைச் சேர்ந்த ரோசிலி (50) ஆகிய இரண்டு பெண்களை கடத்தி நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பத்மம் என்ற பெண்மணி, தமிழ்நாட்டின் தருமபுரி பகுதியில் வசித்து வந்தவர் என தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மந்திரவாதி பகவந்த் சிங், அவரது மனைவி, முகமது ஷாபி ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், அதிர வைக்கும் பல கொடூரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசாரின் தகவல்படி, "எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஷாபி பல ஏமாற்று வேலைகளை செய்து பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டவர். அவர், ஶ்ரீதேவி என்ற பெயரில் முகநூலில் போலியான கணக்கை உருவாக்கி, அதன் மூலம் மந்திரவாதியான திருவல்லாவைச் சேர்ந்த பகவந் சிங்குடன் நட்பாக பழகியுள்ளார்.
ஶ்ரீதேவியாக பகவந்த் சிங்கிடம் பேசிய ஷாபி, பெரும்பாவூரில் ரஷீத் என்று ஒரு பெரிய துறவி இருப்பதாகவும், அவர் நினைத்தால் உங்களை பணக்காரர் ஆக்குவார் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பகவந்த் சிங் தொடர்பு கொண்டதால், ஷாபி ரஷீத்தான பகவந்த் சிங் வீட்டுக்குள் சென்றுள்ளார். மூட நம்பிக்கைகளில் மூழ்கியிருந்த பகவந்த் சிங்கையும், அவரது மனைவியையும் ஏமாற்றி, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பின்னர் நரபலி கொடுத்தால் பொருளாதாரத்தில் முன்னேறலாம் என்று அந்த தம்பதியை நம்ப வைத்துள்ளார். அவர்களை பணத்தை ஏற்பாடு செய்ய சொல்லிய ஷாபி, கடந்த ஜூன் மாதம் தனது முகநூல் தோழியான ரோஸ்லினை ஏமாற்றி, அழைத்துச் சென்று நரபலி கொடுத்துள்ளார். அந்த பெண்ணை சித்திரவதை செய்து ரத்தத்தை சேகரித்து மந்திரவாதியின் வீட்டைச் சுற்றி தெளித்துள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்துள்ளனர்.
சில நாட்களுக்குப் பிறகு தங்களது நிதி நிலையில் மாற்றம் இல்லை என மந்திரவாதி கூறியதால், ஷாபி மீண்டும் ஒரு நரபலி கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். முன்பு போலவே, கொச்சியில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த பத்மம் என்ற பெண்மணியை ஏமாற்றி அழைத்துச் சென்று பகவந்த் சிங்கின் வீட்டில் வைத்து, ரோஸ்லினுக்கு செய்த அனைத்து சித்திரவதைகளையும் செய்துள்ளனர். அதேபோல் இவரது உடலையும் துண்டு துண்டாக வெட்டி புதைத்துள்ளனர். இந்த நரபலி கடந்த 27ஆம் தேதி நடந்ததாக தெரிகிறது. ஷாபி பத்மத்துடன் சென்ற சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ளன" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 7 வயது சிறுமியைப்பாலியல் வன்புணர்வுசெய்து கொன்ற 19 வயது இளைஞர்!