புதுச்சேரி: வானரப்பேட்டை அலைன் வீதியைச் சேர்ந்தவர்கள் பாம் ரவி மற்றும் அந்தோணி. இருவரும் இன்று (அக்.24) பிற்பகல் அலைன் வீதியில் இருசக்கர வாகனத்தில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் திடீரென அவர்களை சுற்றி வளைத்து வெடி குண்டு வீசியுள்ளனர். இதில் நிலைகுலைந்த அவர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் அந்த அடையாளம் தெரியாத கும்பல் கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிட அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
இருவரும் உயிரிழப்பு
தகவல் அறிந்து சென்ற முதலியார்பேட்டை காவல்துறையினர் படுகாயமடைந்த பாம் ரவி மற்றும் அந்தோணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் வெடிகுண்டு சோதனை செய்யும் கருவிகள், மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
தொழில் போட்டி காரணமாக கொலை
காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், பழைய ரவுடிகள் பாம் ரவி மற்றும் அந்தோணி தற்போது ரவுடி தொழிலை கைவிட்டு மனம் திருந்தி வாழ முயற்சி செய்து வந்துள்ளனர்.
இருப்பினும் பழைய முன்விரோதம் மற்றும் தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. புதுச்சேரியில் வரவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பாம் ரவி போட்டியிட இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் பாம் ரவி, அந்தோணி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் சமீப காலமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பட்டப்பகலில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு மத்தியில் ரவுடிகள் கொலை செய்யப்பட்டது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் அலுவலர் புகார் - எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு