தியோகர்: உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள தியோகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான சுதாகர் ஜாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் அவரது பாதுகாப்புக்காக இரண்டு காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று (பிப்.11) நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் திடீரென சுதாகர் ஜாவை நோக்கி துப்பாக்கியால் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதைக் கண்ட காவலர்கள் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் தொழிலதிபரான சுதாகர் ஜா உயிர் தப்பினார்.
இந்த தாக்குதலில் உயிரிழந்த காவலர்கள் சந்தோஷ் யாதவ் மற்றும் ரவி மிஸ்ரா என்றும், இருவரும் சாஹிப்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தெரிகிறது. இது குறித்து அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திர ஜாட் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
இச்சம்பவம் தொடர்பாக எஸ்.பி. சுபாஷ் சந்திர ஜாட் கூறும்போது, "தொழிலதிபர் சுதாகர் ஜா பாதுகாப்பாக இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான சிலரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதற்கான நோக்கம் தெரியவில்லை. தொழில்போட்டி காரணமாக தாக்குதல் நடந்ததா? என்றும் விசாரித்து வருகிறோம். தொழிலதிபர் சுதாகர் ஜா மீது ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதற்காகத்தான் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது" என்று கூறினார்.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் 3 மகள்களை வாளால் தாக்கிய தந்தை கைது