புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மே ஒன்றாம் தேதி முதல் புதுச்சேரியில் மதுபான கடைகள், சாராயக் கடைகள், கள்ளுக்கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில், அபிஷேகபாக்கம் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அபிஷேகபாக்கம் கிராமத்திற்கு விரைந்த காவல் துறையினர், சோதனை செய்தனர்.
அப்போது, அங்குள்ள ஒரு குடோனில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 300 லிட்டர் கள்ளச்சாராயம், 200 காலி பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், கள்ளச்சாராயம் தயாரித்த இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.