பெங்களூரு: 2019ஆம் ஆண்டு இறுதிவாக்கில் சீனாவின் வூகான் மாகாணத்தில் கோவிட்-19 பாதிப்புகள் முதன்முதலில் கண்டறியப்பட்டன.
இந்தப் பாதிப்புகள் உலகம் முழுக்க பரவிய நிலையில் சர்வதேச நாடுகள் பொதுமுடக்கத்தை அமல்படுத்தின. விமானம், தரைவழி போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டன.
தற்போது கோவிட் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து நாடுகளும் தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுத்துவருகின்றன. இந்தியாவில் இரண்டு தவணைகளும் சேர்ந்து இதுவரை 100 கோடிக்கும் மேல் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் இருவருக்கு புதிய வகை கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தப் பாதிப்புகள் இதுவரை இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் மட்டுமே கண்டறிப்பட்டன. தற்போது பெங்களூருவில் இருவருக்கு இந்தப் பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளன. இந்த இருவருக்கும் SARS-CoV-2இன் புதிய வகையான AY.4.2 பாதிப்பு உள்ளது.
இது குறித்து மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் கே. சுதாகர் கூறுகையில், “இது தொடர்பாக நிபுணர்களுடன் ஆலோசித்துவருகிறோம். முதலமைச்சரிடம் இது குறித்து கூறி புதிய பாதுகாப்பு விதிகள் வகுக்க திட்டமிடுவோம்” என்றார்.
இதையும் படிங்க : ஏஒய்.4.2 வகை கரோனா பரவல்... பள்ளிகளுக்கு விடுமுறை?