புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "சட்டப்பேரவை தேர்தலின் போது என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளை திறப்போம் என்றனர். ஆனால் வங்கிக் கணக்கில் செலுத்திய பணத்தை கூட பயனாளிகளுக்கு தருவதை நிறுத்தி விட்டனர்.
அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளத்தில் ரேஷன் வழங்கப்பட்டுவரும் நிலையில் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. நாட்டிலேயே புதுச்சேரியில்தான் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. ரேஷனில் பொருட்கள் தர ஒதுக்கப்பட்ட நிதியை வெள்ள நிவாரணத்துக்கு தந்துவிட்டதாக முதலமைச்சர் தெரிவிக்கும் சூழல் உள்ளது.
பாஜகவை சேர்ந்த அமைச்சர் சாய் சரவணக்குமாரோ, கட்சியினருக்கோ, ஊடகத்துக்கோ, மக்களுக்கோ அறிவிக்காமல் தனது தொகுதி மக்களை அழைத்து வந்து ரேஷன் கடை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் பல பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால் மாநில உரிமை மீட்போம், ’புதுச்சேரி மக்கள் நலன் காப்போம்’ என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் செப்டம்பர் 20 முதல் 26ஆம் தேதி வரை 200 கிலோ மீட்டர் பரப்புரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம்.
அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து ரேஷனில் பொருட்கள் தரும் வரை வலுவான இயக்கத்தை முன்எடுப்போம். பாஜகவை தோற்கடிக்க அகில இந்திய அளவில் ஒரே அணியில் அனைத்து எதிர்க்கட்சிகளும் வருவது அவசியம். தேசிய அளவில் இல்லாவிட்டாலும் மாநில அளவில் ஒருங்கிணைந்து வெல்ல வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.41,000க்கு டீ-சர்டா..? :ராகுலின் டீ-சர்ட் விலை குறித்து விமர்சித்த பாஜக!