அகமதாபாத்: வருவாய்த் துறை நுண்ணறிவு இயக்குநரகத்தால் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 2,988.22 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் சென்னைவாசிகள் எனத் தெரியவந்துள்ளது.
ஆந்திர நிறுவனம் ஒன்றுக்கு முகத்துக்குப் பூசும் பவுடர் கொண்டுவரப்பட்ட கண்டெய்னர்களில் ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது.
வழக்கில் திடீர் திருப்பம்
வருவாய்த் துறை நுண்ணறிவு இயக்குநரகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட இரண்டு கண்டெய்னர்களை முந்த்ரா துறைமுகத்தில் சோதனை செய்தனர்.
அதில் ஒரு கண்டெய்னரில் 1,999.58 கிலோ ஹெராயினும், மற்றொரு கண்டெய்னரில் 988.64 கிலோ ஹெராயினும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு கண்டெய்னர்களும் பறிமுதல்செய்யப்பட்டன.
இது தொடர்பாக டெல்லி, சென்னை, குஜராத்தில் அகமதாபாத், மாண்ட்வி ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் கடத்தலில் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
டெல்லிக்கு கடத்தவே திட்டம்
சென்னையைச் சேர்ந்த சுதாகர், வைஷாலி என்னும் கணவன் மனைவி இருவரே, இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். ஹெராயின் பார்சல் வந்த முகவரியுடன் தொடர்புடைய ஜிஎஸ்டி எண்ணானது, 2020ஆம் ஆண்டு வைஷாலியின் பெயரிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவர் ஏற்றுமதி, இறக்குமதி தேவைக்காக உரிமம் பெற்று செயல்பட்டுவந்திருக்கிறார்.
கடந்த பல ஆண்டுகளாக இந்த இணை சென்னையிலேயே வசித்துவந்துள்ளது. சில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டதைப் போல ஹெராயின் விஜயவாடாவுக்கு கடத்தப்பட திட்டமிடப்படவில்லை.
அதற்கு மாறாக டெல்லிக்கு கடத்தவே திட்டமிடப்பட்டிருந்துள்ளது. மேலும், இது தொடர்பாக பலரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. உலகின் மிகப்பெரிய ஹெராயின் பறிமுதல் இது என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பண மோசடி விவகாரம்: சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் உள்ளிட்ட மூவரிடம் விசாரணை