பெங்களூரு : கர்நாடகவில் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆகியோரை முன்னாள் ஊழியரால் கொன்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அமிர்தல்லி பம்பை காலனியில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பனிந்திர சுப்ரமணியா மற்றும் வினு குமார் என அடையாளம் காணப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
ஏரோனிக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநராக இருந்த பனீந்திராவும், அதே நிறுவனத்தில் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றிய வினு குமாரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு தனியாக நிறுவனத்தை தொடங்கியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், பனீந்திரா மற்றும் வினு குமார் ஆகியோர் தனது தொழிலுக்கு இடையூறாக இருப்பதாக பெலிக்ஸ் என்பவர் கருதியதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் தன்னுடைய தொழிலுக்கு இடையூறாக இருப்பதால் அவர்களைக் கொல்ல பெலிக்ஸ் சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஜூலை. 11) பிற்பகல் 4 மணி அளவில் அலுவலகத்திற்குள் நுழைந்த பெலிக்ஸ், மறைத்து வைத்து இருந்த ஆயுதத்தை கொண்டு பனிந்திரனையும் வினுவையும் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரும் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தை விட்டு பெலிக்ஸ் தப்பி தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அமிர்தலி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான பெலிக்சை தேடி வருகின்றனர்.
கர்நாடகாவில் பட்டப்பகலில் தொழில் போட்டி காரணமாக இரண்டு தொழிலதிபர்கள் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசியங்கள் கசியவிட்டதாக புகார்.. மத்திய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது!