கேரளா: கொல்லம் மாவட்டம் வள்ளிக்காவு பகுதியில் உள்ள அமிர்தபுரிக்கு வந்த வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 22-ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து கேரளாவிற்கு 44 வயதுள்ள ஒரு பெண் வந்துள்ளார். அதன் பின்னர் அமிர்தபுரியில் கருநாகப்பள்ளிக்கு அருகே உள்ள புகழ்பெற்ற ஆன்மீக குரு மாதா அமிர்தானந்தமயி தேவியின் ஆசிரமத்திற்கு சென்று தங்கியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 31 ஆம் தேதி அந்த அமெரிக்கப் பெண் கடற்கரையில் அமர்ந்திருந்த போது, அவ்வழியாக போதையில் வந்த இருவர் அந்த பெண்ணிடம் நண்பர்கள் போல பேச்சு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த இளைஞர்கள் வைத்திருந்த சிகரெட்டை காட்டி வேண்டுமா எனக் கேட்ட போது, அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்த இளைஞர்கள் வைத்திருந்த மது பாட்டிலைக் காட்டி மிரட்டி அமெரிக்க பெண்ணை அவர்களது பைக்கில் ஏற்றிக் கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டிற்குச் சென்றுள்ளனர். அதன் பின்னர், அந்த பெண்ணிற்கு வழுக்கட்டாயமாக மதுவை கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ராமன் கோயிலில் முஸ்லீம்கள் வேலை பார்ப்பதா? - சர்ச்சையாகும் ஸ்ரீராம் சேனாவின் கோரிக்கை
மயக்க நிலையில் இருந்த அந்த பெண் சுயநினைவு திரும்பியவுடன், ஆசிரமத்திற்கு சென்று அங்கிருந்த ஆசிரம அதிகாரிகளிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். அந்த பின்னர், ஆசிரம அதிகாரிகள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வந்த கருநாகப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் செரிழிக்கல் பன்னிசேரிலை சேர்ந்த நிகில்(28) மற்றும் செரிழிக்கல் அரையசேரிலை சேர்ந்த ஜெயன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது IPC 376D மற்றும் IPC 376(2)(n) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தி வரும் கருநாகப்பள்ளி போலீசார் விசாரணைக்கு பின்னரே இந்த சம்பவம் குறித்த முழுமையான விவரங்களை உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பலே இளைஞர் கைது!