டெல்லி: இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் படி, சமூக ஊடகமான ட்விட்டர், அதன் மாதாந்திர அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி முதல் மே 25ஆம் தேதி வரையில், இந்தியாவில் மொத்தம் 11 லட்சத்து 34 ஆயிரத்து 71 ட்விட்டர் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 11 லட்சத்து 32 ஆயிரத்து 228 ட்விட்டர் கணக்குகள், குழந்தைகள் தொடர்பான பாலியல் பதிவுகள், ஒப்புதலின்றி எடுக்கப்பட்ட நிர்வாணப் படங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்ததாகவும், அதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் பதிவிட்டதற்காக 1,843 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பயனாளர்களிடம் இருந்து பெறப்பட்ட 500-க்கும் மேற்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார்களில் 264 புகார்கள், பாலியல் துன்புறுத்தல் தொடர்புடையவை என்றும், ஆபாசமான உள்ளடக்கங்கள் தொடர்பாக 67 புகார்களும், அவதூறு பரப்புதல் தொடர்பாக 51 புகார்களும் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவை குறித்த ட்விட்டர் பதிவுகளை நீக்குவது தொடர்பான மத்திய அரசின் உத்தரவை எதிர்த்த ட்விட்டர் நிறுவனத்தின் வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய அரசின் உத்தரவுப்படி, 1,474 ட்விட்டர் கணக்குகளில், 175 ட்வீட்களில் உள்ள 39 யுஆர்எல்களை (URL) நீக்காத காரணத்திற்காக ட்விட்டர் நிறுவனத்துக்கு 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக கடந்த மாதம், விவசாயிகள் போராட்டம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவற்றிற்கு ஆதரவான பதிவுகளையும், மத்திய அரசை விமர்சிக்கும் பதிவுகளையும் நீக்கும்படி இந்திய அரசு மிரட்டியதாக ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
அண்மையில் நியூயார்க்கில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எலான் மஸ்க், ஜேக் டோர்சியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருந்தார். அதில், 'ஒவ்வொரு அரசும் வெவ்வேறான சட்டங்களை, வழிகாட்டுதல்களையும் செயல்படுத்தி வருகின்றன. அதற்கு கட்டுப்பட்டு சேவை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை. இல்லையெனில் நிறுவனத்தை மூடிவிட்டு போக வேண்டிய நிலை ஏற்படும்' என்று கூறினார்.