கோவிட்-19 பெருந்தொற்று பலரின் வாழ்க்கையை மீளாத்துயரத்தில் ஆழ்த்திவரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் கனவையும் சிதைத்துள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் வசிக்கும் க்ரேகோரி, சோஜா தம்பதியினருக்கு பிறந்த இரட்டையரான ஜோபிரெட் மற்றும் ரால்பிரேட் ஜோ கடந்த ஏப்ரல் 23ஆம் தேதிதான், தங்கள் 24ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர்.
இருவரும் கோவையைச் சேர்ந்த கல்லூரியில் ஒன்றாகப் பொறியியல் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தனர். கடந்த 23ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், அடுத்த நாளிலேயே இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
சில நாள்கள் வீட்டிலேயே மருத்துவம் பார்த்துள்ள நிலையில், நிலைமை மோசமடைந்ததால் மே 1ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் உடல்நலம் தேறிவந்துள்ள நிலையில் மே 10ஆம் தேதி இருவருக்கும் கோவிட்-19 ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. இதையடுத்து குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், அது சில நாள்கள் கூட நீடிக்கவில்லை.
மூச்சுத்திணறல் காரணமாக மே 13ஆம் தேதி ஜோபிரெட் திடீரென உயிரிழந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் தனது இன்னொரு மகனிடம் தெரிவிக்கவில்லை.
இரட்டையர்களில் மற்றொரு சகோதரரான ரால்பிரேட் ஜோ, இதுகுறித்து கேட்டுள்ளபோது, அவரது பெற்றோர் உண்மையைக் கூறாமல், உயர் சிகிச்சைக்காக ஜோபிரெட்டை டெல்லி அனுப்பிவைத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதை நம்ப மறுத்த ரால்பிரெட், 'என்னிடம் உண்மையை மறைக்கின்றீர்கள்' எனக் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
அடுத்த நாளே ரால்பிரெட்டும் மரணமடைந்துள்ளார். ஆசையாய் வளர்த்த இரட்டை மகன்களை கோவிட் தொற்றுக்கு பலிகொடுத்த க்ரேகோரி, சோஜா தம்பதி மீளாத் துயரில் தவித்து வருவது பலரையும் வேதனைக்கு உட்படுத்தியிருக்கிறது.