ஆந்திராவில் விசாகப்பட்டினம் மாவட்டம் சிந்தாப்பள்ளி பகுதியில் காவல் துணைக் கண்காணிப்பாளராக இருக்கும் வித்யா சாகர் முன்னிலையில் இன்று (டிச,6) 12 நக்சல்கள் சரண் அடைந்தனர். மக்கள் விடுதலை கொரில்லா படை (People's Liberation Guerrilla Army (PLGA)) என்ற நக்சல் அமைப்பைச் சேர்ந்த இவர்கள் சிந்தாப்பள்ளி பகுதியிலுள்ள பத்ருதிகுந்தா, பனசலாபந்தா, அகுலுரு, ராமகட்டா ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் துணைக் கண்காணிப்பாளர் வித்யா சாகர், ”வெறுமனே தகவலறிந்தவர்களாக மட்டும் மக்களை முத்திரை குத்தி யூகத்தின் அடிப்படையில் அவர்களைக் கொல்வது போன்ற நக்சல்களின் சமீபகால நடவடிக்கையால் போராளிகள் வருத்தமடைந்துள்ளனர்.
நக்சல்களின் செயல்பாட்டால் கிராம மக்களில் சிலர் காணாமல்போயிருக்கிறார்கள். காவல் துறையினர் எவ்வாறு பல்வேறு திட்டங்களை மேற்கொள்கிறது என்பதையும் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வளர்ச்சி நடவடிக்கைகளில் பயன்கள் மக்களுக்கு கிடைக்கவிடாமல் நக்சல் அமைப்பினர் தடுப்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக சரணடைந்தவர்களின் வாக்குமூலத்தின்படி, அவர்கள் விருப்பத்தின்பேரில் நக்சல் அமைப்பில் இணையவில்லை.
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில்தான் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர். நக்சல்களின் பாரம்பரிய கோட்டைகளாகவும், அரணாகவும் இருந்த கிராமப் பகுதியிலிருந்து போராளிகள் சரணடைவது நிச்சயமாக அவர்களது அமைப்பின் வலிமை குறைவதற்கான அறிகுறிதான்” என்றார்.