புது டெல்லி: கடந்த புதன் கிழமையன்று (டிச.08) தமிழ்நாட்டிலுள்ள குன்னூரில், முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவப் பணியாளர்கள் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் மரணமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
முப்படை விசாரணை என்றால் என்ன?
பிரிக் டாக்டர் பி.கே. கண்ணா ஈடிவி பாரத் செய்தியாளரிடம் கூறியதாவது, 'இதுபோன்ற விசாரணையில், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ராணுவ வீரர்கள் விசாரணையை நடத்துவதற்கான குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த விசாரணையில் ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி மற்றும் எஞ்சிய பகுதிகள் பற்றிய முழுமையான விசாரணையும் அடங்கும். பொதுவாக இதுபோன்ற விபத்து ஏற்பட நான்கு முக்கியமான விஷயங்கள் காரணமாக அமையக்கூடும்: மனிதப் பிழை, இயந்திரப் பிழை, வானிலை மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்.
பொதுவாக ஹெலிகாப்டர் விபத்து விசாரணையானது விமானப்படை அலுவலர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படும். ஆனால், இறந்தவர்களின் பட்டியலில் முப்படைத் தலைமைத் தளபதி உள்ளதால், முப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்று அவர் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை தொடங்கிய முதற்கட்ட அடிப்படை விசாரணையில், விபத்துக்குள்ளான இந்திய விமானப்படையின் Mi-17V5 ஹெலிகாப்டரில் இருந்து ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டது.
விபத்து நிகழ்வதற்கு முன்னால் நடந்த முக்கியமான தகவல்களைப் பெற, இக்கறுப்புப் பெட்டி பெரிதும் உதவும். விபத்து நடந்த இடத்திலிருந்து 300 மீட்டருக்கு அப்பால் பரிசோதனையில் ஈடுபட்டபோது இக்கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: வீடியோ எடுத்தவர்களின் பரபரப்பு பேட்டி