திரிபுரா: பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தில், கொலை, கற்பழிப்பு, கலவரங்கள் உள்ளிட்டவை அதிகரித்துவிட்டதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
கடந்த நான்கு மாதங்களில் 23 கொலைகள் நடந்துள்ளதாகவும், கடந்த 2021ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 137 ஆக அதிகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதால், முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் கமிட்டி அண்மையில் வலியுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் வழங்கினார். பிப்லப் குமார் மீது பாஜக எம்எல்ஏக்கள் அதிருப்தியாக இருந்ததாக கூறப்பட்டது.
இதற்கிடையில், பிப்லப் குமார் கடந்த 12ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசிய நிலையில், பாஜக தலைமை இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. திரிபுரா மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது நினைவு கூரத்தக்கது.