திருவனந்தபுரம்: காதலர் நாளன்று திருவனந்தபுரத்தில் திருநங்கை காதல் ஜோடி உறவினர், நண்பர்கள் முன்னே திருமணம் செய்துகொண்டனர். திருவனந்தபுரத்தின் இடுப்பாஞ்சியில் உள்ள அழகாபுரி அரங்கத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. பெற்றோர்களும், உறவினர்களும் தம்பதியை வாழ்த்தினர்.
கடந்த 10 ஆண்டுகளாகச் சிறந்த நண்பர்களாக இருந்தவர்கள் ஷியாமா எஸ் பிரபா, மனு கார்த்திகா, இவர்கள் இருவரும் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளனர். தற்போது இவர்களின் திருமணம் சட்டப்படி செல்லாது. இருப்பினும் இவர்கள் இதனைச் செல்லுபடியாக அறிவிக்கக் கோரி மாற்ற நீதிமன்றத்தை அணுகவுள்ளனர்.
இந்தக் காதல் தம்பதியினர் தங்கள் திருமண விழாவில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். நாட்டில் திருநங்கைகளின் வளர்ச்சியில் தங்கள் திருமணம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று கூறினர்.
மேலும் மனு கார்த்திகா டெக்னோபார்க்கில் மனிதவள மேலாண்மையில் (HR) பணிபுரிகிறார். கேரள அரசின் திருநங்கைகள் சமுதாய நலத் துறையின் ஒருங்கிணைப்பாளராக ஷியாமா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹிஜாப் அணியவில்லை என்றால் பாலியல் தொல்லை ஏற்படும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு