இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தூத்துக்குடி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான தீப்பெட்டி ஆலைகள், கடலை மிட்டாய், விவசாயம், நூற்பு ஆலைத் தொழில்கள் நிறைந்த பகுதி கோவில்பட்டி. இவை தவிர, மத்திய மாநில அரசு அலுவலகங்கள், தனியார், அரசு கல்லூரிகளும் நிறைந்துள்ளன. அதோடு தென் மாவட்டங்களில் ஒரு பெரிய இணைப்பு மையமாக கோவில்பட்டி திகழ்கிறது.
மேலும், கோவில்பட்டி வழியாக நாள்தோறும் 27 பயணிகள் தொடர்வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. முன்பதிவின் மூலமாக, ஆண்டுக்கு பத்து கோடி ரூபாயை மதுரைக் கோட்டத்திற்கு பெற்றுத் தருவதால், கோவில்பட்டி நிலையம், ‘ஏ’ கிரேடு தகுதி பெற்றுள்ளது. ஆனால், தற்போது பாதித் தொடர்வண்டிகளே ஓடுகின்றன. அதிலும், நாகர்கோவில்-சென்னை, புனலூர், நாகர்கோவில்-கோவை விரைவுத் தொடர்வண்டிகள், சென்னை-கன்னியாகுமரி அதிவிரைவுத் தொடர்வண்டி ஆகியவை, கோவில்பட்டி நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன.
மேலும், புதன், வெள்ளி ஆகிய நாள்களில் மட்டுமே ஓடும், கன்னியாகுமரி- தில்லி நிஜாமுதீன் விரைவுத் தொடர்வண்டி, வெள்ளிக்கிழமை மட்டும் ஓடும் நாகர்கோவில்-சென்னை வண்டி ஆகியவையும் கோவில்பட்டி நிலையத்தில் நிற்பதில்லை. இதனால், ஏழை,எளிய, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் முன்பு போலவே கோவில்பட்டி நிலையத்தில் தொடர்வண்டிகள் நின்று செல்ல, தெற்கு ரயில்வே உடனே அறிவிப்பு வெளியிட வேண்டும்.
மேலும், பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி என்ற பழந்தமிழ்ப் பெயர்களில் ஓடிக்கொண்டு இருந்த அத்தனைத் தொடர்வண்டிகளின் பெயர்களையும் மறைத்து, சிறப்பு ரயில்கள் என ஒரேப் பெயரில் இயக்குகின்றார்கள். பெயர்களை மாற்ற வேண்டிய தேவை என்ன? யாருடைய அழுத்தத்தின் பெயரில் மாற்றினார்கள்? தமிழக மக்களின் உணர்வுகளோடு தெற்கு ரயில்வே விளையாடக் கூடாது. வழக்கமான பெயர்களிலேயே தொடர்வண்டிகளை இயக்க வேண்டும் ” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? - முதலமைச்சருக்கு கமல்ஹாசன் கேள்வி