ஹைதராபாத் (தெலங்கானா): ஆந்திரப்பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டம், தெனாலியைச் சேர்ந்தவர், அலூரி உஷா ராணி (53) என்ற விஜயாக்கா என்ற போஜக்கா. இவர் பானு திதி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பில் இணைந்து, நாட்டில் பல்வேறு சமூக இடர்களை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
குறிப்பாக தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் பாதுகாப்புப் படை மீது ஐந்து தாக்குதல்கள், காவல் துறையினருடன் மூன்று துப்பாக்கிச்சூடு, பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான மூன்று இடங்கள் தகர்ப்பு, இவை தவிர இரண்டு தாக்குதல் வழக்குகள் மற்றும் கடத்தல் ஆகியவை உள்பட மொத்தம் 14 குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழுவின் வடக்கு துணை மண்டலப் பணியகத்தின் பிரிவுக் குழு உறுப்பினராக உள்ள உஷா ராணி, தெலங்கானா டிஜிபி மகேந்தர் ரெட்டி முன்னிலையில் சரணடைந்தார். உடல் நலக்குறைவு மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து அமைதியாக வாழ வேண்டும் என்ற காரணங்களை முன்னிறுத்தி உஷா ராணி சரணடைந்துள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார். மேலும் மாநில அரசு சார்பாக அவருக்கு ரூ.50,000 நிதியுதவியும், மறுவாழ்வினையும் அளிக்க உள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விரைவில் ஹைதராபாத்தில் தலித் மாநாடு - தெலங்கானா முதலமைச்சர் அறிவிப்பு