டூல்கிட் தொடர்பான வழக்கில் பெங்களூருவை சேர்ந்த 22 வயதே ஆன சுற்றுச்சூழல் ஆர்வலர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் குறித்த பல திடுக்கிடும் தகவல்களை டெல்லி காவல்துறை பகிர்ந்துள்ளது.
இதுகுறித்து டெல்லி காவல்துறை தரப்பு, "குடியரசு தினத்திற்கு முன்பு, டிராக்டர் பேரணி குறித்து சமூக வலைதளங்களில் பரப்புரை மேற்கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் திஷா ரவி மற்றும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட இரண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோர் சூம் காலில் பங்கேற்றனர்.
கனடாவைச் சேர்ந்த புனீத் என்பவர் தான், நிகிதா ஜேக்கப், சாந்தனு, திஷா ரவி, போயட்டிக் ஜஸ்டீஸ் பவுண்டேஷன் என்ற காலிஸ்தான் அமைப்பு ஆகியோருக்கிடையேயான தொடர்பை ஏற்படுத்தியவர். அந்த சூம் சந்திப்பு ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்றது.
திஷா ரவியின் செல்போனை ஆராந்தபோது, அவருக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்தன. அந்த தகவல்களின் அடிப்படையில்தான் திஷாவை கைது செய்தோம். நிகிதா தலைமறைவாகியுள்ளார். மேல்குறிப்பிட்ட அந்த மூன்று பேர் தான் டூல்கிட்டை பகிர்ந்துள்ளனர். சாந்தனுவின் மெயில் ஐடியை வைத்துதான் அந்த டூல்கிட் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.