திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்கேற்ப தரிசன டிக்கெட் முன்பதிவு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய வழிகளில் வழங்கப்படுகிறது.
திருப்பதி வரும் பெரும்பாலான பக்தர்கள் 300 ரூபாய் சிறப்புத் தரிசன டிக்கெட் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். சிறப்புத் தரிசன டிக்கெட் பெரும்பாலும் ஆன்லைன் மூலமே அதிகளவில் முன்பதிவு செய்யப்படுகிறது. சாதாரணமாகத் திருப்பதியில் தரிசன டிக்கெட் பெற 3 மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது.
தற்போது ஆன்லைன் மூலம் ஒரு மாதத்திற்கு முன்பாக 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும், அடுத்த மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்பதிவு துவங்கும் தேதிகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது.
நாள்தோறும் 35 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுவதாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜனவரி 12 முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை ஏழுமலையானைத் தரிசிக்க, 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட உள்ளன.
வரும் 9-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆன்லைனில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் விற்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான https://tirupatibalaji.ap.gov.in பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே, திருமலையில் தங்கும் அறைக்கும் சேர்த்து அதே இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தரிசனத்திற்கான டிக்கெட் தொகை ஆன்லைன் மூலம் செலுத்திய பின்னர், தேவஸ்தான கணக்கிற்குப் பணம் மாறியதும் இரண்டு நாள் இடைவெளியில் பக்தர்கள் தங்களது தரிசன டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. சிறுவன் கூறிய காரணம் என்ன?