பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்தவர், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.பி. அடிக் அகமது. இவரது சகோதரர் அஷ்ரப். இருவரும் கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜ் பால் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 15ம் தேதி மருத்துவப் பரிசோதனைக்காக இருவரும் பிரயாக்ராஜ் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்த போது, நிருபர்கள் போல் நின்று கொண்டிருந்த 3 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், அடிக் அகமது, அஷ்ரப் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக லவ்லேஷ் திவாரி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் நீதி விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் ஒருபகுதியாக, நீதி விசாரணைக்குழு முன் அடிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் கொலை செய்யப்பட்டதைப் போல், சிறப்பு புலனாய்வு குழுவினர் நடித்துக் காட்டினர். அதை நீதி விசாரணைக்குழுவினர் பதிவு செய்து கொண்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும், வரும் 23ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க பிரயாக்ராஜ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஹமிர்புர், கஸ்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து கவுசாம்பி காவல் உதவி கண்காணிப்பாளர் சாமர் பகதூர் கூறுகையில், "கவுசாம்பியில் அடிக் அகமதுவின் மனைவி தங்கியுள்ள வீட்டில் குற்றவாளிகள் சிலர் மறைந்து இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு 2 மணி நேரம் சோதனை செய்தோம். ட்ரோன் கேமரா மூலம் சோதனை நடத்தப்பட்டது. எனினும் யாரும் கைது செய்யப்படவில்லை" என்றார்.
இதையும் படிங்க: India Corona : புது உச்சம் தொட்ட கரோனா பரவல் - ஊரடங்கு கட்டுப்பாடு?