புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், சபாநாயகர் தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (ஜூன் 12) வெளியானது.
புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி வெளியிட்ட உத்தரவில், "15ஆவது புதுச்சேரி சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் கூட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். அன்றைய தினமே சபாநாயகர் தேர்தல் நடத்தவும் அனுமதி தந்துள்ளார்.
தேர்தல் நியமனச் சீட்டுகளைப் பேரவைச் செயலரிடம் பெறலாம். நியமனச் சீட்டுகளை அளிப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் தனித்தனியாக அனுப்பியுள்ளோம். அலுவல் நடத்தை விதிப்படி நியமனச்சீட்டுகளை வரும் 15ஆம் தேதி நண்பகல் 12 வரை தங்களிடம் ஒப்படைக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'பேயர்ன் முனிச்' அணிக்கு ஆடத் தயாராகும் வங்காளச் சிறுவன்!