ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 13 வயது சிறுமி கடந்த ஜூலை 10ஆம் தேதி அன்று காணவில்லை என அவரது பெற்றோர் ஜெய்ப்பூர் வித்யாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமாராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய தனிப்படை ஒன்றை அமைத்து வடக்கு ஜெய்ப்பூர் காவல் ஆணையர் பாரிஸ் தேஷ்முக் விசாரணைக்கு உத்தரவிட்டார். சிறுமியின் கையில் அவரது பாட்டியின் செல்போன் இருப்பது தெரியவந்ததை அடுத்து, அந்த செல்போன் எண் மூலம் சிறுமியின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பீவார் நகரில் இருப்பது தெரியவந்தது.
இதனயடுத்து, சிறுமி குறித்த தகவல்கள் அஜ்மீர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு அரசு பேருந்து ஒன்றில் அந்த சிறுமி இருப்பதை அம்மாவட்ட காவல் துறையினர் கண்டுபிடித்தனர். காவலர்கள் பேருந்தில் இருந்த சிறுமியை பாதுகாப்பாக மீட்டனர். பேருந்தில் அந்த சிறுமி அழுதப்படி இருந்துள்ளார் என கூறப்படுகிறது.
அந்த சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் பாரிஸ் தேஷ்முக்,"13 வயதான அந்த சிறுமி, இன்ஸ்டாகிராம் ஆஃபில் மூன்று வாரங்களுக்கு முன் அறிமுகமான நண்பனை பார்க்க விரும்பியுள்ளார். மேலும், தனது குடும்பத்தினர் மீதும் சிறுமி சற்று கோபத்திலும் இருந்துள்ளார். எனவே, இன்ஸ்டாகிராமில் பழகிய நண்பனை காண வேண்டும் என்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
இருப்பினும், யார் அந்த நண்பன்?, எங்கு போய் சந்திக்கப்போகிறோம்? என்ற தகவல்கள் எதுவும் முழுமையாக அந்த சிறுமிக்கு தெரியவில்லை. இதுகுறித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதில், குற்றவாளிகள் எதும் சம்பந்தப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறாம். குற்றவாளிகளுக்கு தொடர்பு இருக்கும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
13 வயதான அந்த சிறுமி, பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறது. சமூக வலைதளங்களில் நீண்ட நேரம் செலவழிப்பதாக சிறுமியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால், கோபமடைந்த சிறுமி, தனது இன்ஸ்டா நண்பனை பார்க்க இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 5 வயது மாணவியை 30 விநாடிகளில் 10 முறை அறைந்த ஆசிரியை - வீடியோ வைரல்!