கர்நாடக மாநிலம் ஹோஸ்பேட்டில் தேவதாசி முறை இன்னும் நடைமுறையில் உள்ளது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆறு வருடங்களில் 26 சிறுமிகள் தேவதாசியாக மாறியது தெரியவந்துள்ளது.
கர்நாடக வனத்துறை அமைச்சர் ஆனந்த் சிங்கின் தொகுதியில்தான் தேவதாசி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். கடந்த ஆண்டு, காவலர்கள் உதவியோடு சகி அறக்கட்டளையினர் மூன்று பெண்களை இதிலிருந்து மீட்டனர்.
கடவுளின் பெயரால் இந்த மோசடி வேலையை செய்துவருகின்றனர் அக்கிராம மக்கள். முன்பு கோயில்களில் இதற்கான சடங்குகள் நடைபெறும். தற்போது யாருக்கும் தெரியாமல் இருக்க, வீடுகளிலேயே சடங்குகள் நடத்தப்படுகிறது. அழகான பெண்களாக தேர்வு செய்து இதில் ஈடுபட வைக்கின்றனர். மக்களின் படிப்பறிவின்மை இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சகி அறக்கட்டளை தேவதாசி முறைக்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.
தேவதாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் தேவதாசி மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்பட்டால்தான் இந்த முறையை அடியோடு ஒழிக்க முடியும் என்கிறார் தேவதாசி மறுவாழ்வு மைய அலுவலர் கோபால்.