இதுதொடர்பாக புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,' வானிலை ஆய்வு மையம் நிவர் புயல் தொடர்பாக சுமார் ஒருவார காலத்துக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனைத்தொடர்ந்து மக்களைப் பாதுகாப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அரசு அதிலிருந்து தவறி விட்டது.
மேலும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களை மூடவேண்டும்; மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி இருக்க வேண்டும் என அறிக்கை மட்டுமே வெளியிட்டது. இதனால் புயலுக்கு முந்தைய தினமான 25ஆம் தேதி காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் காலையில் விற்ற விலையைவிட, நான்கு மடங்கு அதிகமாக மாலையில் விற்கப்பட்டது. அவ்வாறு விலை அதிகமாக விற்றதைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுபோல் 26ஆம் தேதி, காலை பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக பாண்லே பால் பல இடங்களில் கிடைக்கவில்லை. இதனால் குழந்தைகள், நோயாளிகள், முதியோர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர். புயலின்போது அரசு நிறுவனமான 'பாண்லே' மூலம் தட்டுப்பாடு இன்றி பால் கிடைப்பதற்குக்கூட, இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரீமியத்தை காலத்தோடு செலுத்தவில்லை. ஆனால், நிவர் புயலில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, மரவள்ளி போன்ற பயிர்கள் சேதாரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் பயிர் காப்பீடுத்திட்டத்தின்கீழ், நமக்கு நஷ்ட ஈட்டுத்தொகை கிடைக்குமா என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, உடனடியாக பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரீமியத்தை செலுத்தி, நடைமுறைக்குக் கொண்டுவந்து விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டுத்தொகை இருவார காலத்திற்குள் கிடைக்கச்செய்யவேண்டும். காப்பீட்டு நிறுவனம் பிரீமியம் செலுத்துவதற்கான காலம் முடிந்து விட்டதாகக்கூறி, ஏற்க மறுத்தால் அரசே ஏக்கர் ஒன்றிற்கு நெல்லுக்கு ரூ. 10,000, வாழைக்கு ரூ 25,000 தரவேண்டும். கரும்பு, மரவள்ளி போன்ற பயிர்களுக்குத் தலா ரூ. 20,000 தரவேண்டும். அதேபோல், இருவார காலமாகத் தொழிலுக்குச் செல்லாத மீனவர்களுக்கு, மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ 20,000/- வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே புயல், கனமழை உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அதிலிருந்து மாறாமல், இந்த அரசும் உடனடியாக நிவாரணத்தை வழங்க வேண்டும்.
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்திற்கும் தலா. ரூ.5,000 வழங்கவேண்டும். நிவாரணமுகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்கள் மற்றும் மழை நீர் உட்புகுந்ததால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குத் தலா ரூ.10,000 உடனடியாக வழங்கவேண்டும்' என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நிவர் புயல் மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு அமைச்சர் பாராட்டு