ஹைதராபாத்: சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின்கீழ் புதிய நாடாளுமன்ற கட்டடம் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதன் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள வெண்கல தேசிய சின்னத்தை, பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் இறுதிகட்ட கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு, சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பெயரை வைக்க வேண்டும் என வலியுறுத்தி தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேறியது.
இதற்கு காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்தன. முன்னதாக இந்த தீர்மானத்தை தாக்கல் செய்த அமைச்சர் கே.டி.ராமா ராவ், புதிதாகக் கட்டப்படும் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு, அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரை வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
சமூக நீதி, ஜனநாயகம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவர் அம்பேத்கர் என்றும், நாடாளுமன்ற கட்டடத்திற்கு அவரது பெயரை விட, வேறு எந்தப் பெயரும் சிறப்பாக அமைந்துவிடாது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வெண்கல தேசிய சின்னம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்!