ஐதராபாத் : 119 தொகுதிகளை கொண்ட தெலங்கான சட்டமன்றத்திற்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் ஆளும் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்த தேர்தலில் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி ராமாராவ், பாஜக மக்களவை உறுப்பினர்களான பாண்டி சஞ்சய் குமார் மற்றும் டி அரவிந்த் உள்பட் 2 ஆயிரத்து 290 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதலமைச்சர் கேசிஆர் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
கஜ்வெல் தொகுதியில் கேசிஆருக்கு எதிராக பாஜக எம்எல்ஏவான எட்டல ராஜேந்தர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் ரேவந்த் ரெட்டி கமரெட்டி தொகுதியில் கேசிஆரை எதிர்த்து போட்டியிடுகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கே.சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி 47.4 சதவீதம் வாக்குகள் பெற்று 119 இடங்களில் 88 தொகுதிகளை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்தது.
காங்கிரஸ் வெறும் 19 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் கடந்த தேர்தலை காட்டிலும் பாஜகவின் வாக்கு சதவீதம் சற்று உயர்ந்தது. இம்முறை மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்று முனைப்பில் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் திட்டமிட்டு உள்ள நிலையில், எப்படியாவது தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜக, காங்கிரஸ் கங்கணம் கட்டி வருகிறது.
தெலங்கானா சட்டசபை தேர்தலுக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்து உள்ளார். வாக்குப்பதிவு நவம்பர் 30 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று(நவ. 28) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பொது வெளியில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவது நடப்பது உள்ளிட்ட பணிகளுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க : திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கு - சந்திரபாபு நாயுடுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! என்ன காரணம்?