ஹைதராபாத்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை கூடுதலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை கவனித்துவருகிறார்.
இவர் புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி கரோனா தடுப்பூசியின் முதல் தவணையைச் செலுத்திக்கொண்டார்.
இந்நிலையில், பழங்குடியின மக்கள் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்திக்கொள்வதால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கரோனா தடுப்பூசியின் இரண்டாம் தவணையை இன்று (ஜூலை 12) போட்டுக்கொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், "தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மகேஷ்வரம் வட்டம் கே.சி. மண்டா என்ற கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுடன் இணைந்து கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டேன்.
மக்களுக்குத் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்தக் கிராமத்தை நூறு விழுக்காடு தடுப்பூசி செலுத்தப்பட்ட ஊராக மாற்றவும், அங்கு வாழும் மக்களுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்
தயக்கமின்றி தடுப்பூசி செலுத்த அனைவரும் முன்வர ஊக்குவிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆளுநர் நேரடியாக வந்ததால், அருகிலுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்வமாகத் தடுப்பூசி செலுத்த முன்வந்தனர்.