தெலங்கானா மாநிலத்தில் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க அம்மாநில உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி தெலங்கானா அரசு ஒரு ஆணையைப் பிறப்பித்துள்ளது.
அந்த ஆணையின்படி, பட்டாசுகள் வாங்கவோ, விற்கவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆணையில், சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக விற்பனையாளர்கள் பட்டாசுகள் விற்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத் தலைமைச் செயலர் சோமேஷ் குமார், அம்மாநில காவல் துறைத் தலைவர், தீயணைப்புத் துறை, காவல் துறை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்தத் துறைகள் அனைத்தும் பட்டாசு பயன்பாடு குறித்து ஆய்வுசெய்து நவம்பர் 16ஆம் தேதியன்று அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்றும் தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
பட்டாசுகள் பயன்படுத்தக் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தெலங்கானா பட்டாசுத் தொழிலாளர்கள் டீலர்ஸ் சங்கம் மனு தாக்கல்செய்துள்ளது. அந்த மனுவில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைக்குமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.