ஹைதராபாத் : நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உருமாறிய கரோனா தொற்று ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1500-ஐ தாண்டியுள்ளது.
நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத் துறை கரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் புதிய கரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 10ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாநில தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று (ஜன.1) நடைபெற்றது. இதில், தெலங்கானாவில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், ஜனவரி 10ஆம் தேதி வரை அனைத்து வகையான பேரணிகள், பொதுக் கூட்டங்கள் மற்றும் அதிக மக்கள் ஒன்று கூடும் மதம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்டவற்றிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 அபராதம்
கடைகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். இதை நிறுவன அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும் போதும் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும்.
பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வயது முதியவர்கள், இதர நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரோனா நோய்க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் கரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக செயல்படுத்த அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிதாக 12 பேருக்கு ஒமைக்ரான்
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 317 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 82 ஆயிரத்து 215 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 29 ஆக உள்ளது.
மாநிலத்தில் புதிதாக 12 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது எனத் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோவின் செயலியில் 3.5 லட்சம் சிறார்கள் முன்பதிவு!