பாகல்கோட் : கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில், 2021ஆம் ஆண்டு நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அவையின் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த இரண்டு பேர் மக்களவை எம்.பி.க்கள் இருப்பிடத்திற்குள் குதித்து களேபரத்தில் ஈடுபட்டனர்.
இருவரையும் பிடித்து மக்களவை உறுப்பினர்கள் அவை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அதேபோல் நாடளுமன்றத்திற்கு வெளியே வண்ண புகைகளை வீசி பாதுகாப்பு குளறுபடிகளை ஏற்படுத்திய பெண் உள்பட 2 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்த டெல்லி போலீசார், முதற்கட்டமாக 4 பேர் கைது செய்தனர்.
தொடர்ந்து தலைமறைவாக இருந்த 2 பேரை அடுத்தடுத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் உபா சட்டத்தின் கீழ் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிஆர்பிஎப், டி.ஜி அனிஷ் தயால் சிங் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது.
கைது செய்யப்பட்ட 6 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் மனோரஞ்சனுடன் தொடர்பில் இருந்ததாக கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை சேர்ந்த சாய் கிருஷ்ணா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 வயதான சாய்கிருஷ்ணாவின் தந்தை ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ஆகும். சாய் கிருஷ்ணா மற்றும் நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி வழக்கில் கைது செய்யப்பட்ட மனோரஞ்சன் ஆகியோர் பெங்களூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் கைது செய்யப்பட மனோரஞ்சன், அமோல் ஷிட், நீலம் தேவி, சாகர் சர்மா ஆகியோர் காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து 4 பேரையும் பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலை நீடிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே இந்த வழக்கில் கர்நாடகாவை சேர்ந்த டெக்கி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : அமெரிக்காவில் ஆப்பிள் பொருட்களுக்கு தடை? காப்புரிமை சிக்கலில் சிக்கியதா ஆப்பிள்? அதிர்ச்சி தகவல்!