அமராவதி (ஆந்திரா): பொதுமக்களின் நீண்ட எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே அரசியல் கட்சி விரைவில் தொடங்கப்படும் என நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச.03) அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பை அடுத்து அவரது ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புதிய கட்சியைத் தொடங்கும் ரஜினியின் முடிவை தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகரும் ஜன சேனா கட்சித் தலைவருமான கே.பவன் கல்யாண் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, "ரஜினிகாந்த் எனது நல்ல நண்பர். அவர் அரசியல் களத்தில் நுழைவது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது முடிவை நான் வரவேற்கிறேன். ஜனநாயக நாட்டில் புதிய அரசியல் கட்சிகள் தோன்றுவது இயற்கை. இந்தப் புதிய பரிமாணத்தில் அவர் வெற்றியடைவார் " எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த பவன் கல்யாண், "ரஜினிகாந்த் நேரடியாக அரசியலுக்கு வராவிட்டாலும், நீண்ட காலமாக மறைமுக அரசியலில் ஈடுபாட்டுடன் இருந்ததை நான் கண்டுள்ளேன். அவருக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவருடைய அரசியல் வருகை வெற்றிகரமாக இருக்க வாழ்த்துகள்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: திமுக, பாஜக, இப்ப ரஜினி - அர்ஜுனமூர்த்தி பின்னணி?