புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய சத்துணவு வழங்க அக்ஷ்ய பாத்ரா அமைப்பின் 60ஆவது மத்திய சமையல் கூடம் மற்றும் புதுச்சேரியின் முதலாவது தொழில்நுட்ப சமையல் கூடத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஜன.5ஆம் தேதி தொடங்கிவைத்தார்.
இலாசுப்பேட்டை வள்ளலார் பெண்கள் உயர்நிலைப் பள்ளி அருகில் உள்ள நவீன சமையல் கூடத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் அக்ஷ்ய பாத்ரா அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொழில்நுட்ப சமையலறையைப் பார்வையிட்ட துணைநிலை ஆளுநர், மாணவர்களுக்காக அங்கு சமைக்கப்படும் சத்துணவின் தரத்தை அறிந்து கொள்ள பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். பின்னர் முதலமைச்சருடன் இணைந்து மாணவர்களுக்கு சத்துணவு பரிமாறினார்.
ரூ.15 கோடியில், 50,000 குழந்தைகளுக்கு உணவு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர், "அக்ஷ்ய பாத்ரா நிறுவனம் மூலமாக 60ஆவது சமையல் கூடம் சுமார் ரூ.15 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டிருக்கிறது. புதுச்சேரி அரசு, மத்திய அரசு மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து இதை உருவாக்க இருக்கிறார்கள். இதன் மூலமாக 50 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு அளிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
தூய்மையான உணவு சமைக்கப்படுகிறது இது குழந்தைகளுக்கு மிகுந்த ஊட்டச்சத்தினை அளிக்கும். குழந்தைகளுக்கு கரோனா காலத்தில் ஊட்டச்சத்துள்ள உணவுகளே எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்" என்றார்.
மேலும், இதற்காக ஒத்துழைப்பு அளித்து வரும் முதலமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பாராட்டுகிறேன். புதுச்சேரி அரசு தற்போது மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தொடங்கி இருக்கிறது குழந்தைகளின் வளர்ச்சியில் நாம் அக்கறை கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: சென்னை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு