டெல்லி: முதலமைச்சர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக நேற்று (ஆகஸ்ட் 16) டெல்லி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் டெல்லி சென்ற முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ராசா ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற அவர், முர்முவை சந்தித்து குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் டங்கரை ஸ்டாலின் சந்திக்க சென்றார். அப்போது குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் டங்கர், ஸ்டாலினை வாசலில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். அவருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 17) மாலை பிரதமர் மோடியை, முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.
அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்காக பிரதமர் சென்னை வந்ததற்கு நன்றி தெரிவிப்பதோடு, தமிழ்நாட்டிற்கான, கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் மோடியிடம் அளிக்கிறார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டிற்க்கு வரவேண்டிய நிலுவைத் தொகை, ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் இருக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும், தமிழ்நாட்டுக்கு தேவையான புதிய திட்டங்கள் குறித்தும் வலியுறுத்துவார் என தெரிகிறது.
இதையும் படிங்க:காவடி தூக்கவா டெல்லி போகிறேன்...ஸ்டாலின்